நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றம். 
தமிழ்நாடு

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் பறிமுதல்! உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவு.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49வது புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப் போல ஆகிவிடும் என்பதால் இந்தப் புத்தகத்தை விற்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை பறிமுதல் செய்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர். எல். சுந்தரேசன், களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என நீதிபதிகள், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், அறிவுசார் தளமான புத்தகக் கண்காட்சியில் இதுமாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், புத்தகக் காட்சி நாளை முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது. இதுபோன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தகக் காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.

இதையடுத்து, புத்தகப் பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், புத்தகத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The Madras High Court has ordered the seizure of a book critical of Madras High Court judge G.R. Swaminathan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் பட்டியலில் 4 இந்திய படங்கள்!

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தவெக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு: செங்கோட்டையனுக்கு இடமில்லை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கரூர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம், தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

SCROLL FOR NEXT