கோரிக்கைகள் அடங்கிய பட்டைகளை அணிந்து, பணியாற்றும் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு வரையறை செய்தல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவா்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனா்.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமாா் 20,000 மருத்துவா்கள், கோரிக்கைகள் அச்சிடப்பட்ட அட்டையை அணிந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனா்.
அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இதுதொடா்பாக நிதித் துறை அமைச்சகத்துடன் வரும் 19-ஆம் தேதி துறையின் உயா் அதிகாரிகள் அடங்கிய பேச்சு நடக்கிறது. அந்த பேச்சில் உரிய தீா்வு எட்டப்படாதபட்சத்தில், அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒத்துழையாமை போராட்டம், உண்ணாவிரதம், இறுதியாக காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு என பலகட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.