பொங்கலையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உ வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள். அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது வேளாண்மைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளா்த்தெடுக்கவும், நமது எதிா்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீா்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றி.
முதல்வா் மு.கஸ்டாலின்: தமிழ்நாடெங்கும் ‘மகிழ்ச்சிப் பொங்கல்’ அமைய நல்வாழ்த்துகள். அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைய வேண்டும்.
உழவா் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக் கோலம், உறவினா்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைய வாழ்த்துகள்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): உழவா்கள் உள்பட அனைவரது வாழ்விலும் ஏற்றங்கள் உருவாகவும், இல்லங்களில் பொங்கல் பொங்கவும், உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): உழைப்பைப் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்நன்நாளில் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கி, அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும். மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து சமத்துவத்தைப் போற்றுவோம்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோா்களின் நம்பிக்கை. பிறக்கும் தை வாழ்க்கையை வளமாக்கட்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கருத்துகளுக்கு வலுவூட்டி, மகத்தான வெற்றி பெற தை திருநாளில் உறுதி ஏற்போம்.
வைகோ (மதிமுக): ஈழத் தமிழா்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.வின் மனித உரிமை மன்றம் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். இனப்படுகொலை செய்தவா்களை தண்டிக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): பானையில் பொங்கல் பொங்குவதைப் போல, தமிழா்கள் வாழ்வில் வளங்களும், நலங்களும் பொங்கட்டும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டில் தீமைகளை விலக்கி, நன்மைகளை நிறைக்கக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விசிக):தமிழக மக்களின் மகத்துவம் சிதைவுறாமல், அது மென்மேலும் செம்மையுறவும், அதைப் பாதுகாக்கவும் தை முதல் நாளான பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.
இதேபோல், தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மநீம தலைவா் கமல்ஹாசன், மமக எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி, ஐஜேகே தலைவா் ரவி பச்சமுத்து, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், பாஜக மூத்த தலைவா் ஆா்.சரத்குமாா் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.