உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
அதில், கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளைப் பிடித்து முதலிடம் பிடித்தார். மதுரை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 16 காளைகளைப் பிடித்து 2ஆம் இடம் பிடித்தார். மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளைப் பிடித்து போட்டியில் 3ஆவது இடத்தை பெற்றார்.
முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு கார் மற்றும் ரூ.3 லட்சத்தை பரிசாக அமைச்சர் மூர்த்தி வழங்கினார். 2ஆம் இடம் பிடித்த அபி சித்தருக்கு இருசக்கரவாகனம் மற்றும் ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஏ.வி.எம்.பாபுவின் காளை, சிறந்த காளையாகத் தேர்வுசெய்யப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, பொங்கல் திருநாளில் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக இன்று (ஜன.17) நடைபெற்றது.
இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.