உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று (ஜன.17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். ஆட்சியர் பிரவீன் குமார் காளை மாட்டு வண்டியை பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2 ஆம் பரிசை வெல்லும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. மேலும், போட்டியில் கலந்து கொண்டுள்ள சிறந்த ஆட்டத்தைக் காண்பிக்கும் காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், அண்டா, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர் வருவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 2000க்கும் அதிகமான காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.