தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் ஜன.23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைகிறது என்பது குறித்து அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே, குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். தற்போது அதை ரூ.2,000-ஆக உயா்த்தி அறிவித்துள்ளாா்.
இதை, திமுகவின் தோ்தல் அறிக்கையை போலவே இருப்பதாகக் கூறமுடியாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் நயினாா் நாகேந்திரன்.