நிபா வைரஸ் குறித்து அனைத்து சுகாதார அலுவலர்களும் கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பறவைகள் மூலமாக மனிதருக்கு ஏற்படும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நிபா வைரஸ் பரவல் தொடர்பாக எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது துறையின் சார்பில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்போடு இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் இதுதொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் வேகமெடுத்து வரும் நிபா தொற்று காரணமாக பறவைகள், விலங்குகள் கடித்த பழங்கள், மற்றும் பதநீர் அருந்துவதைத் தவிர்க்குமாறு தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நிபா தொற்றின் தாக்கம் இல்லை என்றாலும் நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.