இந்தியாவில் 2 செவிலியர்களுக்கு நிஃபா தொற்று ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிஃபா தீநுண்மி தொற்று ஏற்பட்டிருப்பது சமீபத்தில் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் நிஃபா தொற்று குறித்து தென்கிழக்கு ஆசியாவின் உலக சுகாதார அமைப்பு, "இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இரண்டு செவிலியர்களுக்கு நிஃபா தொற்று சோதனை உறுதிசெய்யப்பட்ட பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார நிறுவனங்கள் கண்காணிப்பு, ஆய்வகச் சோதனை, கள நிலவரங்களையும் மேம்படுத்தியுள்ளன.
தொற்று உறுதிசெய்யப்பட்ட இரு செவிலியர்களுடன் தொடர்புடைய 196 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் கண்காணிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நிஃபா தொற்றுக்கான அறிகுறி எதிர்மறையாகவே உள்ளது.
இதுவரையில் வேறேதும் நிஃபா தொற்றுகள் கண்டறியப்படவில்லை. மேலும், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பயண கட்டுப்பாடுகளோ வர்த்தகக் கட்டுப்பாடுகளோ ஏதும் விதிக்கத் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வௌவால், பன்றி உள்ளிட்டவைகளால்தான் நிஃபா தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தத் தொற்றால், காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், சுவாசப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
நிஃபா தொற்று, 40 முதல் 75 விழுக்காடு மரணத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது. பொதுவாக, பாதிக்கப்பட்டவருடன் நீண்ட காலம் தொடர்பிருந்தால் மட்டுமே தொற்று பரவும் சாத்தியமுண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.