புது தில்லி: மதுபானமும், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களும்தான், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உடல் பருமன், நீரிழிவு போன்ற பலவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன என்று நன்கு அறிந்திருந்தபோதிலும் இந்தியாவில் இவ்விரண்டும் விலை மலிவாகக் கிடைக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மக்களின் நலனை பாதிக்கும் இவ்விரண்டு பொருள்கள் மீது மிக மோசமான வரி விதிப்பு காரணமாக, விலை மலிவாக இருக்கின்றன என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு வரி விதிக்கும் முறை இந்தியாவில் மிக மோசமாக இருப்பதாகவும் பல்வேறு வரி விதிப்புகள் இருந்தபோதும், அவை இதுபோன்ற மோசமான பானங்கள் மீது விதிக்கப்படாமல், அது விலை மலிவாக விற்கப்பட்டு, அதிக மக்கள் குடித்து அதனால் உடல்நலம் பாதிப்பு சம்பவங்கள்தான் அதிகரிக்கின்றன.
ஒருபக்கம் இதுபோன்ற பானங்கள் மீது விதிக்கப்படும் வரியால் வருவாய் கிடைக்கும், மறுபக்கம் மக்களின் உடல்நலன் காக்கப்படும் என்ற திட்டமிடல் வரி விதிப்பில் காணப்படவில்லை. மருத்துவமனைகளில் தற்போது கல்லீரல் பாதித்து இளம் வயதில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மதுபானம் தொடர்பான புற்றுநோய், இதய நோய்கள், மன நல பிரச்னைகள், சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. எனினும், அதன் மீது அதிக வரி விதிக்கப்படவில்லை.
மதுபானங்கள், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பதால், அதிக வருவாய் கிடைக்கும் நிறுவனங்கள், முக்கிய பிரமுகர்களைக் கொண்டு விளம்பரம் செய்கிறது, இதனால் இளைஞர்களிடையே அதிக பிரபலமாகும் இதுபோன்ற பானங்களால், பல நோய்கள், அதிக இறப்புகள் நேரிடுகின்றன.
மதுபானங்களைக் காட்டிலும் இந்தியாவில் விற்பனையாகும் விலை மலிவான சர்க்கரை கலந்த குளிர்பானங்களால் நேரிடும் உடல்நல அபாயங்கள் சொல்லில் அடங்காதவையாக உள்ளன.
ஆனால், இதற்கு நேர்மாறாக, பழச்சாறு, தேநீர், காபி போன்ற பானங்கள் வரி விதிப்பு முறையால் சற்று விலை அதிகரித்து விற்பனையாவதும், மறைமுகமாக சர்க்கரை பானங்கள் விற்பனையை அதிகரிக்கின்றன. அதனால், அந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் அவை குறைந்த வரியை செலுத்துகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.