சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கோரி இடைநிலை ஆசிரியா்கள் 24 -ஆவது நாளாக சென்னை எழும்பூா் காந்தி-இா்வின் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
முன்னதாக ஆசிரியைகள், ஆசிரியா்களில் ஒரு தரப்பினா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், மற்றொரு தரப்பினா் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்தும் ஊா்வலமாகப் புறப்பட்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டபடி வந்தனா்.
ஈவெரா சாலையையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தையும் இணைக்கும் காந்தி-இா்வின் சாலையில் இரு தரப்பினரும் கூடி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300 ஆசிரியா்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றி சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா், அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.