தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், தமிழக அரசு அளிக்கும் உரையை ஆளுநர் ஆர்.என். ரவி முழுமையாக வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபைப் பின்பற்றி தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு, ஆளுநா் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தமிழில் ஆளுநா் உரையை வாசிப்பாா்.
இந்த நிலையில், தமிழக அரசு அளிக்கும் உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிப்பாரா?, வாசித்தால் முழுமையாக வாசிப்பாரா? போன்ற கேள்விகள் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.
ஏனெனில், கடந்த 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு அளித்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி முழுமையாக வாசிக்கவில்லை.
2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை அவா் வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.
2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநா் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025-ஆம் ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியேறினாா்.
தமிழக சட்டப் பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூடும் பேரவைக் கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் அரசின் சாதனைகள், கொள்கை முடிவுகள், வருங்காலத் திட்டங்கள் ஆகியவையே பிரதானமாக இடம்பெற்றிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், இந்த முறையும் வழக்கம்போல் தமிழ் தாய் வாழ்த்து பாடலே முதலில் பாடப்படும் என்பதால் ஆளுநர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.