வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக இந்திய தொல்லியியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இந்திய தொல்லியியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பல கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
ஆனால், கீழடி அகழ்வாராச்சியை முழுமையாக முடிப்பதற்குள் அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு இடமாற்றம் செய்தது. மேலும், பல ஆண்டுகளாகியும் அவரின் ஆய்வு அறிக்கையை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை.
மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணனிடம் இந்திய தொல்லியியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் கீழடி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
”கி.மு. 300-ல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குகிறது என்று இன்றும் வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அது எப்போது மாறும் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அந்த ஆதாரங்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளிவுலகத்துக்கு தெரியாததால்தான் நமது வரலாற்றை இன்றும் மாற்ற முடியாமல் இருக்கின்றோம். எத்தனையோ ஆய்வுகள் நடந்துள்ளன, ஆனால் எதையும் அப்டேட் செய்யாமல் உள்ளோம்.
அதை மாற்ற முயற்சிப்பதால்தான் இத்தனை பிரச்னைகளை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருக்கின்றோம். ஆய்வு செய்தவருக்குதான் ஆய்வின் முடிவுகள் தெரியும். என்னிடம் இருக்கும் ஆய்வறிக்கை வெளியே வந்தால்தான் உலகத்துக்கு தெரியும். அதை வெளியிடுவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனது அறிக்கையை வெளியிட்டால் பின்னால் வரும் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும். இதனை வைத்து 10 ஆயிரம் ஆய்வுகளை செய்யலாம்.
தொல்லியியலில் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அது பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கின்றன, அதன் வழியாக நமது வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். வரலாற்றை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் பல உண்மை தரவுகள் நமக்கு கிடைக்கும்.
கீழடி என்றாலே சிலருக்கு பயம் வருகிறது. கீழடி என்றால் அதிர்வுக்கு உள்ளாவது ஏன் எனத் தெரியவில்லை. இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள். கீழடியில் இதுவரை 5% ஆய்வுகூட செய்யப்படவில்லை. அந்த ஆய்வே இன்று உலகை பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய துணை கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்காக தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடுதான்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.