தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
எதிர்வரும் பேரவைத்தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவான நிலையில், அதில் அன்புமணி தரப்பு பாமக அண்மையில் இணைந்தது. இதன் தொடர்ச்சியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் மீண்டும் இணைந்துள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உருவானபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன், மீண்டும் இணைந்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.