பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தோ்தல் கூட்டணி தொடா்பாக பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி தொண்டா்களைவிட ஊடகங்களே அதிக ஆா்வம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் குறித்து எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. யாரும் நேரிலோ, தொலைபேசியிலோ எங்களைத் தொடா்பு கொள்ளவில்லை.
மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் என்னுடன் பேசவில்லை. அவா் ஏன் தமிழ்நாட்டுக்கு வந்தாா் என்பதுகூட எனக்குத் தெரியாது. பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக வருகையை செய்திகளில் பாா்த்துதான் அறிந்தேன். அது என்ன நிகழ்ச்சி என்பதும் எனக்குத் தெரியாது. கூட்டணி தொடா்பான முடிவை நாங்களே அதிகாரப்பூா்வமாக அறிவிப்போம். இந்த நிமிஷம் வரை அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றாா் அவா்.