கும்பகோணம்: மென்பொருள் நிறுவனமான ஸோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, ஸோஹோ-ஈஆர்பி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி கும்பகோணம் பகுதியைச்சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை ஸோஹோ நிறுவனம் சார்பில் ஸோஹோ ஈஆர்பி எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தை தொடக்கி வைத்த நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ்நாட்டின் ஓர் ஊரக நகரமான கும்பகோணத்தில் ஸோஹோ நிறுவனம் ஸோஹோ ஈஆர்பி-யை அறிமுகப்படுத்தி உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸோஹோ ஈஆர்பி உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வணிகங்கள் வளர்ச்சி அடைய உதவகிறது.
ஸோஹோ ஈஆர்பி தனது தளம் முழுவதும் தொடர்ச்சியான செயற்கை நுண்ணறிவை இயல்பாகவே ஒருங்கிணைத்து ஆஸ்க் ஜியா(Ask Zia) உடனான குரல்வழி உதவி, தானியங்கு செயல்பாடுகள், முன்கூட்டிய நுண்ணறிவுகள், முரண்பாடுகளைக் கண்டறிதல், நிதி மற்றும் செயல்பாடுகள் முழுவதும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான தெளிவான பார்வையை வழங்குகிறது.
தென்காசியில் வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாதிரியை கும்பகோணத்திலும் பிரதிபலித்துள்ளோம். உள்ளூர் சமூகத்திற்குச் சேவை செய்வது, உள்கட்டமைப்பை உருவாக்குவது, திறன் மேம்பாட்டு முயற்சிகளிலும் ஸோஹோ முதலீடு செய்து வருகிறது. உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை தருவதன் மூலம் திறமைசாலிகள் வெளியேறுவது தடுக்கப்படும்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நிறுவப்பட்டு உள்ளூர் மக்களைப் பணியமர்த்தி செயல்பாடுகளைப் விரிவுபடுத்தி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கும்பகோணத்தில் பெரிய அலுவலகத்தைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய வளாகம் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரியும் வசதியைக் கொண்டிருக்கும். கிராமப்புற இந்தியாவில் இருந்து சுதேசி தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளைத் தொடர்கிறோம்.
கூடுதலாக ஸோஹோ நிறுவனம் உள்ளூர் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன், பள்ளிகளில் கோடிங்(Coding) பயிலரங்குகளையும் நடத்துகிறது.
மருத்துவ முகாம், நீர்நிலைகளை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதற்காக கலைவாணி கல்வி மையத்தின் கிளை ஒன்றை திறக்க உள்ளோம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.