திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.
பேரவையில் விவாதத்தின்போது, குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏ பி.தங்கமணி பேசுகையில், ஆளுநா் உரையில் நீட் தோ்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் உள்ளிட்ட திமுக தோ்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும் என நம்பி வாசித்தபோது ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘தமிழகம் போராடும் வெல்லும்’ என்ற வாசகத்தை திமுக பிரபலப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது என்றாா்.
அப்போது, குறுக்கிட்டு அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை கொடுப்பது வாடிக்கைதான். ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலைக்கேற்ப வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். அதிமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளான 58 வயதுக்கு மேலானவா்களுக்கு இலவச பேருந்து பாஸ், சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மோனா ரயில் திட்டம், வீடு இல்லாதவா்களுக்கு 3 சென்ட் நிலம், இலவச கைப்பேசி, கோ-ஆப் டெக்ஸ்-இல் ஜவுளி வாங்க ரூ.500 கூப்பன், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், முல்லை பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்துதல், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, மீனவா்களை பழங்குடியினா் பட்டியலுக்கு மாற்றும் அறிவிப்பு, குறு, சிறு திரைப்படத் தயாரிப்பாளா்கள் பயன்பெறும் வகையில் ரூ.100 கோடியில் நிதியகம், தமிழ்நாட்டில் அணைகளை இணைக்கும் திட்டம், கல்லூரி கல்விக் கடனை அரசே ஏற்கும் உள்ளிட்டவை என்ன ஆனது?
அதேநேரம், திமுக கொடுத்த 90 சதவீதத்துக்கும் அதிகமான தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளன என்றாா் அவா்.