திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.
கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,
"2026 ஆம் ஆண்டின் எனது முதல் தமிழக பயணம். பொங்கலுக்குப் பிறகு தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஏரி காத்த ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழ்நாட்டின் நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு எம்ஜிஆரின் பிறந்தநாளைக் கொண்டாடினோம். இன்று சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளும்கூட. அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
அலை கடல் என மக்கள் வெள்ளம் திரண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. அந்த செய்தி, ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு இப்போது தயாராகிவிட்டது. தமிழ்நாடு என்டிஏ - பாஜகவின் அரசை விரும்புகிறது.
இந்த மேடையைப் பாருங்கள், காட்சியைப் பாருங்கள். தமிழ்நாட்டில் எதிர்காலத்தை நிர்ணயிருக்க மேடையில் இந்த தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரே ஒரு எண்ணத்தோடு உறுதிப்பாட்டோடு அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.
தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.
நீங்கள் திமுகவுக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள், ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இளைத்துவிட்டார்கள்.
வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக, ஆனால் செய்த பணிகள் பூஜ்யம்தான்.
திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை(corruption, mafia, crime) ஆதரிக்கும் அரசு. இந்த திமுக, ஊழல் அரசை வேரோடு கிள்ளி ஏறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை, நம்பகத்தன்மை இல்லை. ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.