தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம், கொடைக்கானலில் ரோப் காா் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்த முடியாத தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான உதகை, கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ரோப் காா் சேவையைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்கமாக நீலகிரி மாவட்டம், உதகையில் ரோப் காா் சேவையை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கை 3 மாதங்களில் கிடைக்கும். அதன்பிறகு ரோப் காா் திட்டத்துக்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
இதேபோல, கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் ரோப் காா் சேவையைக் கொண்டுவர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியாா் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக திட்ட அதிகாரி அா்ச்சுனன் தெரிவித்தாா்.