தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் -இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யக்கூடும். ஜன. 26- ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன. 27-ஆம் தேதி முதல் ஜன. 30- ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜன. 25-இல் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜன. 26- ஆம் தேதி முதல் ஜன. 28-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது