தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் 42% பெண் தொழிலாளர்கள் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் மூலம் பெண்கள் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (ஜன. 26) நடைபெற்றது. இதில், மகளிரணி செயலரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. உரையாற்றினார்,
கனிமொழி பேசியதாவது:
“தன் 14 வயதில், கைகளில் தமிழ் கொடி ஏந்தி, கையிலே வில், புலி, கயல் கொடி ஏந்தி, இதே தஞ்சை தரணியிலே தமிழையும் தன்மானத்தையும் வளர்த்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் மண்ணிலே, வெல்லும் தமிழ் பெண்கள் என்ற இந்த மாநாட்டை நடத்த எங்களுக்கு அனுமதி அளித்திருக்கக்கூடிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
டபுள் என்ஜின் என்கிறார்கள், எங்களுடைய திராவிட என்ஜினுக்கு முன்னால் இந்த டபுள் என்ஜின் எல்லாம், காலாவதியான என்ஜின், தோல்வியடைந்த என்ஜின், விரக்தியடைந்திருக்ககூடிய என்ஜின் என்று ஒவ்வெறு நாளும் நிறுவிக்காட்டிக்கொண்டிருக்கக்கூடிய எங்களுடைய திராவிட நாயகரை வரவேற்கிறேன்.
இங்கே பல பேர், பல கனவுகளோடு பல்வேறு திசைகளில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளுரில் இருந்தும் சிலர் படையெடுக்கிறார்கள். நமக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று... ஆனால், இங்கே இருக்கக்கூடிய கூட்டம் அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும்.
இது தளபதியின் படை. அண்ணன் ஸ்டாலினின் படை. இந்த படை எந்தப் பக்கமும் திரும்பாது. இது இங்கே மட்டும்தான் வரும், கூடும், ஓட்டுப்போடும்.
ஏன் என்றால்? தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள், அவர்களுக்கு எங்கே கை தட்ட வேண்டும், எங்கே பார்க்க வேண்டும், எங்கே விலகி இருக்க வேண்டும், எந்த பக்கம் போகாமல் இருக்க வேண்டும் என்று தெரியும்.
அதைவிட தமிழகத்தில் இருக்கக்கூடிய பெண்கள் புத்திசாலிகள். வாய் சவடால் விட்டு ஆட்சி நடத்த முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில் 38,000 ஆலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் 42% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். தொழில் வளர்ச்சி முன்பு இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் நலத் திட்டங்கள் மூலம் பெண்கள் மேம்பட்டுள்ளனர்.
குடியரசு என்றால் என்ன என்றே ஆளுநருக்குத் தெரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளிக்கும் உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் முழுமையாக வாசித்ததே இல்லை.
பிரதமர் எந்த நேரமும் வெளிநாடுகளில் இருப்பார். தேர்தல் சீசனில் மட்டும்தான் மாநிலங்களுக்கு வருகைத்தருவார். பிரதமர் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்து பேசியபோது கூட, தனது 45 நிமிட உரையில் அதிமுக பெயரை உச்சரிக்கவில்லை. டபுள் என்ஜின் என்பது தோல்வி அடைந்த மாடல் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.