தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1956 ஆண்டில் தொடங்கி தற்போது 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் என 104 பேருக்குப் பாராட்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு என அனைத்து வருடங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சார்பாக திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு நகர திமுக செயலாளர் ந.சண்முகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியை மீனாராஜலிங்கம் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் திருச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கீரிடம், சால்வை அணிவித்து, ஆடிட்டோரியம் ஹாலுக்கு அவர்கள் ஊர்வலமாக, மலர் தூவி அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், அனைவருக்கும் பாராட்டுக் கேடயங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப் பாராட்டப்பட்டனர். முன்னாள் மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்திப் பேசினர். இதில் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ந. ஜெயராமன் ஏற்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி குறித்தும், கட்டமைப்பு செய்வது குறித்தும் விரிவாகத் திட்டமிடப்பட்டது. பின்னர் முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளைப் பேனரில் கையெழுத்திட்டுப் பதிவு செய்தனர்.
மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த காலங்களின் நினைவுகளைப் பகிர்ந்து மனம் மகிழ்ந்து, கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1059 பேரும், தங்கள் பெயர், படித்த ஆண்டுகளை உரியப் படிவங்களில் பூர்த்தி செய்து விழாக் குழுவினரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதல்முறையாக இப்பள்ளியில் படித்த அனைத்து பேட்ச் முன்னாள் மாணவர்களும், கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் சந்திப்பு நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.