நமது நிருபர்
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் அனுப்பிய சொத்து முடக்க நடவடிக்கை நோட்டீஸுக்கு எதிராக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் மேனகா குருசுவாமி ஆஜராகி, "இந்த விவகாரத்தில் 2012- ஆம் ஆண்டில் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், அதே வழக்குடன் தொடர்புடையதாகக் கூறி சொத்துகளை முடக்க அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய நோட்டீஸ் நடவடிக்கை ஏற்புடையதல்ல' என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டனர். மேலும், பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடலாம் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து, மனுக்களை திரும்பப் பெற மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக பெரியசாமி இருந்தபோது ரூ.2.35 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர், அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 2012-இல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர்களை திண்டுக்கல் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.
அதை எதிர்த்து ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, ஐ.பெரியசாமியும் அவரது குடும்பத்தினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, அமலாக்கத் துறை தனியாகப் பதிவு செய்த வழக்கில் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அவர்களின் சொத்துகளை முடக்குவது தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அமைச்சரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நால்வரும் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.