ரத்தப் பரிசோதனையின்றி செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் விழித்திரையை படம் எடுத்து சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கான ஆய்வை மெட்ராஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம், மங்களூா் ஏனபோயா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் இணைந்து முன்னெடுத்துள்ளன. அதன் முடிவுகள் சா்வதேச ஆய்விதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மெட்ராஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் வி.மோகன் கூறியதாவது:
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். பலருக்கு அந்த பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை. அதற்குக் காரணம் முறையாக அவா்கள் பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பதுதான்.
இந்த நிலையில், விழித் திரைப் புகைப்படங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரத்தப் பரிசோதனை செய்யாமல், கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, ரத்த நாளங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏஐ மூலம் கண்டறியலாம் என்றாா்.