பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வரவேற்றுள்ளார்.
உயா் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026-ஐ’ யுஜிசி அண்மையில் வெளியிட்டது.
அதில், பிரிவு 3(சி)-இல், உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, ஜாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவா்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் ஜாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பதிலிருந்து வெளிப்படையாகத் தவறுவதாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய விதிமுறைகளை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”யுஜிசி (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும்.
மத்திய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் - காஷ்மீர் - சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிர்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, மத்திய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.
ரோகித் வெமுலாவின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தர்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது.
மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் மத்திய பா.ஜ.க. அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.