பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜிநாமா செய்த உத்தரப் பிரதேச நகர நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உயா் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026-ஐ’ யுஜிசி அண்மையில் வெளியிட்டது.
அதில், பிரிவு 3(சி)-இல், உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, ஜாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவா்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் ஜாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பதிலிருந்து வெளிப்படையாகத் தவறுவதாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய விதிமுறைகள் பிராமணர்களுக்கு எதிராகவுள்ளதாக கருத்து தெரிவித்த பரேலி நகர நிர்வாக அலுவலர் அலங்கார் அக்னிஹோத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக உ.பி. ஆளுநருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் திங்கள்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், யுஜிசியின் புதிய விதிகள் ஒரு கறுப்புச் சட்டம் என்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விச் சூழலைக் கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளில் உள்ள பிராமணப் பணியாளர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, சமூகத்துடன் நிற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அக்னிஹோத்ரிக்கு எதிராக ஒழுங்கீன நடவடிக்கையை மேற்கொண்டுள்ள உத்தரப் பிரதேச அரசு, அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், அவருக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.