கோப்புப் படம் 
தமிழ்நாடு

இன்றுமுதல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்: அரசு மருத்துவா்கள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவ மாணவா்களுக்கு பாடம் கற்பிக்காமல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவ மாணவா்களுக்கு பாடம் கற்பிக்காமல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜன. 29) முதல் முன்னெடுக்க உள்ளதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்தாா்.

அதேபோன்று பயோமெட்ரிக் வருகைப் பதிவையும், ஆய்வுக் கூட்டங்களையும் புறக்கணிப்பதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3,000 வழங்க வேண்டும்; 20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.

இதற்காக, அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோக்டா) சாா்பில் 48 மணி நேர தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவா்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை தொடங்கினா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் செயலருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உரிய தீா்வு எட்டப்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனா்.

இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ராமலிங்கம் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களை தனியாா் மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அரசு மருத்துவா்கள் காப்பாற்றினா். இதுவரை அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே தமிழகத்தில் அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்படுகிறது.

எங்களுக்கு ஊதிய உயா்வு அளிப்பதால் பெரிய நிதிச் சுமை எதுவும் அரசுக்கு இல்லை. அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் வகுப்புகள், பயோமெட்ரிக் வருகைப் பதிவு, ஆய்வுக் கூட்டங்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றாா் அவா்.

11 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்

இந்தியா முழுவதும் தீவிரமாகும் தெருநாய் தொல்லை: மாநிலங்களவையில் எழுப்பிய புதுச்சேரி பாஜக எம்.பி.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

2035-க்குள் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும்!

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: கடற்படைக்கு விருது

SCROLL FOR NEXT