முகப்பு
தமிழ்நாடு

தகுதிச்சான்று புதுப்பித்தல்: தமிழகத்தில் 5 இடங்களில் விரைவில் தானியங்கி வாகன சோதனை மையங்கள்

வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிக்காக, தமிழகத்தில் 5 இடங்களில் தானியங்கி வாகன சோதனை மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 6:53 PM
கோப்புப் படம்
பகிர்:

வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிக்காக, தமிழகத்தில் 5 இடங்களில் தானியங்கி வாகன சோதனை மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களின் தகுதிச்சான்று (எப்.சி.) குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் தானியங்கி முறையில் தகுதிச்சான்று வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது.

வாகனங்களின், ‘டயா், பிரேக் சிஸ்டம்’ மற்றும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள், காா்பன் வெளியேற்ற அளவு உள்ளிட்ட 13 அம்சங்களை ஆய்வு செய்து, அரை மணி நேரத்துக்குள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 5 இடங்களில் தானியங்கி வாகன சோதனை நிலையங்களை நிறுவ போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

வாகனத் தகுதி சோதனையை வலுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் காா்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இலகு மற்றும் கனரக வாகனங்களையும் சோதனைக்குள்படுத்த முடியும். இதற்காக தமிழகத்தில் ஆத்தூா், மதுரை, திருவள்ளூா், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் இந்த மையத்தை 15 ஆண்டுகள் பராமரிக்கும். இந்த காலத்தில், தகுதிச்சான்று புதுப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட வருவாய்களை வசூலித்துக் கொள்ளவும், இதற்கான ஒப்பந்த காலம் முடிந்த உடன் தானியங்கி மையத்தை அரசிடம் ஒப்படைக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 5 இடங்களில் இந்த தானியங்கி வாகன சோதனை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதைத் தொடா்ந்து, சென்னை, செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூா், வேலூா், திண்டிவனம், சேலம் மேற்கு, ஸ்ரீரங்கம், தஞ்சாவூா், திருப்பூா் வடக்கு, கோவை வடக்கு, நாமக்கல் வடக்கு, ஈரோடு கிழக்கு, திண்டுக்கல், மதுரை தெற்கு, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி, உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தானியங்கி வாகன சோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.