தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும் சென்னை நந்தனம் கல்லூரி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கடும் கவலை தெரிவித்த அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று பிரேமலதா குற்றம் சாட்டினார். குறிப்பாக, பிழைப்புத் தேடி பிகாரில் இருந்து தமிழகம் வந்த ஒரு குடும்பமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். அதேபோல், மதுரையில் தவறைச் சுட்டிக்காட்டிய அரசு அதிகாரியைப் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மற்றும் உணவக ஊழியருக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நெல்லை பள்ளி மோதல்கள் மற்றும் போதைப்பொருள்:
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரேமலதா, இதற்கெல்லாம் டாஸ்மாக் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் தாராளப் புழக்கமே காரணம் என்றார். "தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் எண்ணம். ஆனால், தற்போது போதை கலாசாரத்தால் இளைஞர்கள் வழிதவறிப் போகிறார்கள். அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
போலீசாருக்கு சுதந்திரம் தேவை:
"ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட நம் காவல்துறைக்குத் தன்னாட்சி அதிகாரமும், முழு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். மதுரையில் அரசு அதிகாரி கொல்லப்பட்டதை விபத்து என முடிக்கப் பார்த்தார்கள், ஆனால் காவல்துறை தற்போது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று அவர் கூறினார்.
கூட்டணி குறித்து விளக்கம்:
தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்:
"தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, இறுதி வாக்காளர் பட்டியல்கூட இன்னும் வெளியாகவில்லை. எனவே, கூட்டணி முடிவெடுப்பதில் எங்களுக்கு எந்த காலதாமதமும் இல்லை. உரிய நேரத்தில், உரிய முடிவை தேமுதிக எடுக்கும். 2011 வரை தனித்துப் போட்டியிட்ட கட்சி எங்களுடையது. எங்கள் மாவட்டச் செயலாளர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் கௌரவத்திற்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்போம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்."
ஊழலற்ற கட்சி தேமுதிக:
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், "தேமுதிக லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் எந்தெந்த கட்சிகள் கையூட்டு பெற்றன என்ற பட்டியல் உங்களிடம் உள்ளது. அதில் தேமுதிக பெயர் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். நாங்கள் சொந்த உழைப்பில் கட்சியை வளர்த்து வருகிறோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
கேப்டனின் கனவு:
மறைந்த தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளை நினைவு கூர்ந்த அவர், "யாரும் எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. அமைதியான, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதே கேப்டனின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி, இந்தத் தேர்தல் வெற்றியை அவருக்குச் சமர்ப்பிப்போம்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக, தாமிரபரணி ஆற்றின் நிலை, சாலை வசதிகள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் குரல் கொடுத்து உரிய தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.