பழமையான கோயில்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர் பிரதீப் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட வரலாற்று ஆய்வாளர் பிரதீப் சக்ரவர்த்தி, ”கலாச்சாரத் தலங்களாகக் கோயில்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”இரும்பு காலத்துக்குப் பிறகு, நீர்ப்பாசனம் மேம்பட்டு நமது உணவு தானிய உற்பத்தி அதிகரித்தபோது, கோயில்கள் பிரம்மாண்டமான கட்டமைப்புகளாக மாறின. ஒவ்வொரு சிறிய சமூகத்திடமும் நிறைய பணம் இருந்தது. அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்தையும் கோயில்களே வழங்கின.
தமிழ்நாட்டின் கோயில்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. உள்ளூர் சமூகத்தில் கோயில்களின் பங்கு என்ன என்பதைப் பதிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் நமக்கு உள்ளது.
தமிழ்நாட்டை நோக்கிப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் பாரம்பரியத்தையும், கல்வெட்டுகள் தொடர்பான கதைகளையும் கண்டறிய சிறிது கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இன்று கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள் தொடர்பான அறிக்கைகளும், தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையத்தில் அனைத்து புத்தகங்களும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
உதாரணமாக, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் ஒரு விரிவான ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிற்பங்கள், கல்வெட்டுகள், கோயிலுடன் தொடர்புடைய விழாக்கள், கோயிலுடன் தொடர்புடைய கவிதை மற்றும் இசை பற்றிய அனைத்துத் தகவல்களும் உள்ளன” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.