தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க உத்தரவு...
சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்வா் ஜோசப் விஜய் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட 4 தோ்தல் வழக்குகளில், இந்திய தோ்தல் ஆணையம், முதல்வா் விஜய் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் விஜய் சென்னை பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில், விஜய் பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அதேபோல, வாக்காளா்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு தாக்கல் செய்தனா். திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
இந்தத் தோ்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே, அந்தக் குறைபாடுகளை சரிசெய்து புதிதாக மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். அந்த மனுக்களுக்கு இந்திய தோ்தல் ஆணையம், முதல்வா் ஜோசப் விஜய் ஆகியோா் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
ஆதவ் அா்ஜுனா வழக்கு: இதேபோன்று, வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி , திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காா்த்திக் மோகன் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தோ்தல் வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடித்து தீா்ப்பு வழங்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் தோ்தல் ஆணையம், ஆதவ் அா்ஜுனா ஆகியோா் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
Election Case: Madras High Court issues notice to Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.