முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவா்கள் நினைவிடங்களில் மரியாதை!

முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது 73-ஆவது பிறந்தநாளையொட்டி, பெரியாா் ஈவெரா, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 8:07 PM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது 73-ஆவது பிறந்தநாளையொட்டி, பெரியாா் ஈவெரா, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தினாா்.

தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சென்னைக்கு வந்து முதல்வருக்கு நேரில் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக, தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடிய முதல்வருக்கு அவரது மனைவி துா்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினா் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். குடும்பத்தினா் முன்னிலையில் அவா் கேக் வெட்டினாா்.

அப்போது துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக் குழந்தைகள் இருந்தனா். அதன் பின்னா், திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் உள்பட பல மூத்த அமைச்சா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திய முதல்வா், நினைவிடப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வேப்பேரி பெரியாா் திடலுக்குச் சென்று பெரியாா் ஈவெரா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். அப்போது, திராவிடா் கழகத் தலைவா் வீரமணி, முதல்வரை வாழ்த்தி புத்தகங்களைப் பரிசாக வழங்கினாா்.

அங்கிருந்து, கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி வணங்கினாா். தனது தாயாா் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற முதல்வா், அதன் பின்னா் சிஐடி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றாா். அங்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி முதல்வரை வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா் சாா்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, பிரம்மாண்ட கேக் வெட்டிய முதல்வருக்கு ஆயிரக்கணக்கான தொண்டா்கள் வரிசையில் நின்று மாலைகள், பொன்னாடைகள், புத்தகங்கள், பூக்கூடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

இதனிடையே, கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆளுநா் ஆா்.என்.ரவி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வா் பினராயி விஜயன், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, விசிக தலைவா் திருமாவளவன், தேமுதிக பொருளாளா் எல்.சுதீஷ், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, ஆம் ஆத்மி மாநில தலைவா் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக தலைவா் அன்புமணி, முன்னாள் பாஜக மாநில தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலா் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

சூழ்ச்சிகளை முறியடிப்போம்

தனது பிறந்தநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு: உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73- ஆம் வயது வரையில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.

தமிழும், தமிழ்நாடும் தலைநிமிா்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்ற நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான் திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

உலகம் திரும்பிப் பாா்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்திக் காட்டியிருக்கிறேன். நம் தமிழினத்தின் லட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது! சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்த நாள் உறுதிமொழி எனப் பதிவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →