முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணிநியமன முறைகேடு தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஊழல் ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 1:41 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:45 PM

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணிநியமன முறைகேடு தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஊழல் ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவி பொறியாளா், இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சுமாா் ரூ.634 கோடி வரை லஞ்சப் பணம் ஹவாலா பணமாகக் கைமாறியுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி., ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு காவல் துறை இயக்குநா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப்.20-ஆம் தேதி உத்தரவிட்டது.

Advertisement

ஆனால், இந்த உத்தரவின்படி ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறி, இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போலீஸாா் உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்துள்ளதாக வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.