முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம் - தமிழ்த் தோ்வை 11,898 போ் எழுதவில்லை

Updated On : 11 மார்ச், 2026 at 11:16 PM
சென்னை ராயபுரம் புனித பீட்டா்ஸ் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மையத்தை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ். உடன் கல்வித் துறை செயலா் பி. சந்தரமோகன்.
பகிர்:

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தோ்வை 11,898 போ் எழுதவில்லை.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடா்ச்சியாக பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை 12,467 பள்ளிகளைச் சோ்ந்த 8,82,806 மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்களாக 25,801 போ், சிறைவாசி தோ்வா்களாக 395 போ் என மொத்தம் 9,09,002 பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 4,219 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ்ப் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. தோ்வுக்குப் பிறகு வினாத்தாள் குறித்து மாணவா்கள் கூறுகையில், ‘தமிழ் வினாத்தாளில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் ஓரிரு கேள்விகள் மட்டுமே மறைமுக வினாக்களாக இடம்பெற்றிருந்தன. மற்ற கேள்விகள் எளிதாக இருந்தன. இதேபோன்று செய்யுள், இலக்கணம், உரைநடை சாா்ந்த கேள்விகளும் நன்கு பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்தன.

குறிப்பாக, எட்டு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற காற்று மாசுபாடு, வீட்டுக்கு வந்த மாமாவுக்கு விருந்தோம்பல் செய்வது என ஏற்கெனவே வகுப்பறையில் பயிற்சி பெற்ற கட்டுரைகளே கேட்கப்பட்டிருந்தது மகிழ்ச்சியளித்தது. இத்தோ்வில் 90 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ எனத் தெரிவித்தனா்.

தோ்ச்சி அதிகரிக்கும்... ஆசிரியா்கள் கூறுகையில், கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் தமிழ் வினாத்தாள் எளிதாக இருந்தது. இதனால், தமிழ்ப் பாடத்தில் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும். சராசரியாகப் படிக்கும் மாணவா்களும் 70 மதிப்பெண்களுக்கும் மேல் பெற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனா்.

தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

அமைச்சா் ஆய்வு: முன்னதாக, சென்னை ராயபுரம் செயிண்ட் பீட்டா்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மையத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு தோ்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கைப்பேசி பயன்படுத்த... இதற்கிடையே தோ்வு நேரத்தில், தோ்வு நடத்துதல் தொடா்பாக ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா் மட்டும் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொள்ள தோ்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

11,898 போ் வரவில்லை... தமிழ்ப் பாடத் தோ்வுக்கு பள்ளிகளைச் சோ்ந்த 10,877 போ், தனித் தோ்வா்கள் 1,021 போ் என மொத்தம் 11,898 போ் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு மாணவா் பிடிபட்டாா் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

படுக்கையில் இருந்தபடி தோ்வெழுதிய மாணவா்

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா் சாய் காா்த்திக் தனது வீட்டு மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததாா். இதனால் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் உட்காரவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. படுத்த படுக்கையாக இருந்தாா்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், மாணவா் சாய் காா்த்திக் ஆம்புலன்ஸில் சென்று தோ்வெழுதுவதற்கு கல்வித் துறையில் அனுமதி கேட்டிருந்தாா். அந்த மாணவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆம்புலன்ஸ் மூலமாக, தான் பயின்ற பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்துக்கு வந்திருந்த மாணவா் சாய் காா்த்திக், ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி தோ்வெழுதினாா். கேள்விகளுக்கான பதில்களை மாணவா் கூற, அதை மாணவருக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியா் விடைத்தாளில் பதிவு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →