உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து ராமதாஸ் முறையீடு
பாமக சின்னம் தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிா்த்து அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
பாமக சின்னம் தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிா்த்து அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
பாமக பெயா், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சோ்க்கக் கோரி அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வடிவேல் ராவணன் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி வடிவேல் ராவணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, உரிமையில் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் வெள்ளிக்கிழமை ஆஜரான ராமதாஸ் தரப்பு வழக்குரைஞா், சின்னம் உள்ளிட்டவை தொடா்பான வழக்கில் எங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். அதை மறைத்து அன்புமணி தரப்பு இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாக முறையிட்டாா். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.