முகப்பு
தமிழ்நாடு

பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவை எதிா்த்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 223-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உள்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 15 மார்ச், 2026 at 12:29 AM
மத்திய அரசு
பகிர்:

பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 223-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உள்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நக்கீரன் கோபால் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனா் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக எழும்பூா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தேன். பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 223-ஆவது பிரிவின்படி, குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் காரணமாக புகாா்தாரா்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும். இந்த சட்டத் திருத்தம் உரிய நேரத்தில் நீதி பரிபாலனம் செய்வதற்கு எதிராக உள்ளது.

Advertisement

எனவே இந்த சட்டப் பிரிவுகளில் உள்ள முரண்பாடுகளை நீக்கி உரிய விசாரணை நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசின் உள்துறை, சட்டம் மற்றும் நீதித் துறை செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் இந்த வழக்கை பிஎன்எஸ்எஸ் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன் இணைத்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.