முகப்பு
தமிழ்நாடு

5 மாநிலத் தோ்தலுக்காக மத்திய அரசு மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு: முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 8:28 PM
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் மத்திய பாஜக அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது.

குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகா்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் கண்டிராதது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு: இருப்பினும், திமுக தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடிவரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அதேநேரம், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம். மாநிலங்களின் தற்போதைய தொகுதி எண்ணிக்கை எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடா்ச்சியாக திமுக கொண்டிருக்கும் நிலைப்பாடு.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் தொடக்கத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயா்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடா்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என தனது பதிவில் முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.