விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்
புதிய விதிகளால், தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 8 லட்சம் பேரின் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்
நாகப்பட்டினம் : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்கு அளிப்பதில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளால், தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 8 லட்சம் பேரின் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்தோர் வாக்குச்சாவடி உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதனால், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டு, தபால் வாக்கு அளிக்கும் சிறப்பு அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன்படி, தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலேயே தபால் வாக்குகளை செலுத்த முடியும்.
தபால் வாக்குகள் அளிப்பதற்காக, ஆட்சியர் அலுவலகங்களிலும் வாக்குப் பதிவுக்கு சில நாள்கள் முன்பே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினர் எனப் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாள்களில் அவர்கள் தபால் வாக்குகள் அளிக்கும் நடைமுறை இருந்து வந்தது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்படும் தபால் வாக்குகள், அவரவர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளன்று தபால் வாக்குகளுடன் எண்ணப்படும். கடந்த தேர்தல்வரை இந்த நடைமுறையே இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது புதிய நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், காவலர்கள், ஊடகத் துறையினர் உள்ளிட்டோர், அந்த மாவட்டங்களில் உள்ள துறைசார் அலுவலர்களிடம் தபால் வாக்குக்கான 12 டி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அந்தப் படிவத்தை தங்கள் சொந்த மாவட்டங்களில், தங்களுக்கு வாக்கு உள்ள தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவிக்கும் நாளன்று அங்கு சென்று தபால் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் தொலைதூரத்தில் பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற அலைச்சலும், அலைக்கழிப்பும் ஏற்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளில் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு பணிகள் உள்ளிட்ட பணிகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர், ஊடகத் துறையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என 8 லட்சம் பேர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
புதிய நடைமுறையின்படி இவர்களுக்கு தபால் வாக்குக்காக இரண்டு நாள்கள் விடுமுறை கிடைப்பதில் பிரச்னை உள்ளது. மேலும் தபால் வாக்குக்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டதால், எத்தனை பேர் இருமுறை அலைந்து தபால் வாக்கு செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவரும் தேர்தல் ஆணையம், தபால் வாக்கு முறையில் நடைமுறைக்கு ஒவ்வாத மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதால், தபால் வாக்கு பெரிதும் பாதிக்கப்படும். எனவே, புதிய நடைமுறையை ரத்து செய்து பழைய முறையிலேயே தபால் வாக்கு செலுத்த வகை செய்ய வேண்டும் என்று அரக ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.