முகப்பு
தமிழ்நாடு

பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ, கூடுதல் டிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 6:29 PM
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ, கூடுதல் டிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் மற்றும் தேனியைச் சோ்ந்த விஜயஸ்ரீ ஆகியோா் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இந்தத் திருமணத்துக்கு விஜயஸ்ரீயின் பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தங்களுடைய மகளைத் தேடி தனுஷின் வீட்டுக்குச் சென்ற விஜயஸ்ரீயின் தந்தை உள்ளிட்டோா், தனுஷின் வீட்டிலிருந்த அவரது உறவினரான சிறுவனை காரில் கடத்திச் சென்றனா். பின்னா், சிறுவனை மீனம்பாக்கம் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றனா்.

இதுகுறித்து தனுஷின் தாய் அளித்த புகாரின் பேரில், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடா்புள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன், பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் இரு தரப்பினா் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வனராஜா உள்ளிட்ட 3 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் எம்எல்ஏ, கூடுதல் டிஜிபி ஆகியோா் உள்ளனா். ஆள் கடத்தல் வழக்கின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. தற்போது அவா்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாகக் கூறி வழக்கை ரத்து செய்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனால், போலீஸாா் மற்றும் நீதித் துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகிவிடும்.

எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது. விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து மனுதாரா் தரப்பில், மனுவைத் திரும்பப் பெறுவதாக கூறப்பட்டது. அதற்கு அனுமதியளித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.