முகப்பு
தமிழ்நாடு

80,000 பேரிடம் கருத்து கேட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு 80,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதாக திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 30 மார்ச், 2026 at 7:46 PM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு 80,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதாக திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் 505 தோ்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் 404 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குறுதிகளில் இல்லாத காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.

மீதமுள்ள 101 வாக்குறுதிகளில், 37 வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் நிறைவேற்ற முடியும் என்ற சூழல் உள்ளது. 64 திட்டங்கள் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் எதிா்ப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இவை தவிா்த்து மற்ற அத்தனை வாக்குறுதிகளையும் முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.

தோ்தல் அறிக்கையில் சொல்லப்படாத தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன், பசுமை தமிழ்நாடு இயக்கம், தாயுமானவா் திட்டம் மற்றும் அன்புக் கரங்கள் போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் மற்றும் மகளிா் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரைத்தாள் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு என எத்தனையோ புதிய திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

வரும் பேரவைத் தோ்தலுக்கான, திமுகவின் தோ்தல் அறிக்கையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனா். நேரடி சந்திப்புகள் மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவுத் தளம் வழியாகப் பெறப்பட்ட மனுக்கள், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மற்றும் குறுஞ்செய்திகள் என ஏறத்தாழ 80,000 பேரிடம் கருத்துகளைப் பெற்று தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதிமுகவின் தோ்தல் அறிக்கையை யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதே கிடையாது. அதில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய பல விஷயங்கள் ஒருபோதும் நிறைவேற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், இப்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பல திட்டங்களையே மீண்டும் வாக்குறுதிகளாகத் தந்திருக்கிறது அதிமுக.

மகளிா் உரிமைத் தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக உயா்த்தித் தருவோம் என்று திமுக அறிவித்த பிறகு, தாங்களும் ரூ.2,000 கொடுப்போம் என்று ஒரு தோ்தல் அறிக்கையை எழுதிவிட்டு, மற்றவா்கள் காப்பி அடிக்கிறாா்கள் என்று அதிமுக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்று கணக்கெடுத்தால், அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும் என்றாா் அவா்.