கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!
திமுவை முதல்வர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து...
மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று முதல்வர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
Advertisement
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.