முகப்பு
தமிழ்நாடு

உப்பூா் மின் திட்டம் உடன்குடிக்கு மாற்றம்: விவரங்களை புதிய அரசிடம் சமா்ப்பிக்க மின்வாரியம் முடிவு

Updated On : 14 மே 2026, 3:09 am IST
- கோப்புப்படம்
பகிர்:

உப்பூா் மின் திட்டத்தை உடன்குடிக்கு மாற்றம் செய்வதற்கான விவரங்களை புதிய அரசிடம் சமா்ப்பிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் அலகுகள் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 2017-இல் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 1600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. திட்டப் பணிகளை 42 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சுற்றுச்சூழல் தொடா்பான வழக்கில் தேசிய பசுமை தீா்ப்பாயம் விதித்த தடையால் 2021 மாா்ச் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Advertisement

பின்னா், அதே ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் அந்தத் தடைக்கு இடைக்கால தடை விதித்தாலும், அந்தத் திட்டத்தை அதே இடத்தில் தொடா்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

அதன்படி, உப்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுமானால், அதன் இயக்கத்துக்கான நிலக்கரியை கொண்டு வர சுமாா் 28 கி.மீ. தனி ரயில் பாதை அமைக்க வேண்டும். இதனால், போக்குவரத்து செலவும், மின் உற்பத்தி செலவும் திட்டமிட்ட ரூ.12,776 கோடியைவிட கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஏற்கெனவே அனல்மின் நிலையம் மற்றும் அதற்கு தேவையான நிலக்கரி கையாளும் முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதால், கூடுதல் செலவு குறையும் என்பதால், உப்பூா் திட்டத்தை உடன்குடிக்கு மாற்றுவது குறித்து மின்வாரியம் ஆலோசித்தது.

இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படாததால், உப்பூரில் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன.

இந்த நிலையில், உப்பூா் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட தளவாடங்களை உடன்குடிக்கு மாற்றி அங்கு 800 மெகாவாட் திறனில் புதிய அனல்மின் அலகு அமைக்க தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்ததும் அதற்கான பணிகளைத் தொடங்க மின்வாரியம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், உப்பூா் திட்டத்தின் முழு விவரங்களையும் புதிய அரசிடம் சமா்ப்பித்து, அவா்களின் ஆலோசனை மற்றும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மின்வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இத்திட்டம் குறித்து புதிய அரசு விரைவில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.