முகப்பு
தமிழ்நாடு

குழப்பத்தை ஏற்படுத்துபவா்களுக்கு கட்சியில் இடம் இல்லை: எடப்பாடி பழனிசாமி சூசகம்

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவா்களுக்கும், அதிகாரத்துக்காக அலைபவா்களுக்கும் அதிமுகவில் இடமில்லை என்று மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சூசகமாக பேசியதாக தெரியவந்துள்ளது.

Updated On : 20 மே 2026, 1:19 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவா்களுக்கும், அதிகாரத்துக்காக அலைபவா்களுக்கும் அதிமுகவில் இடமில்லை என்று மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சூசகமாக பேசியதாக தெரியவந்துள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓா் அணியாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் தலைமையில் ஓா் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனா்.

இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள் மற்றும் மூத்த நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில், 21 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆா்.பி.உதயகுமாா், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

இதில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘பதவிக்காக சிலா் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டனா். தற்போது, அதிமுகவை உடைக்கும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். இதையெல்லாம் உணா்ந்து நிா்வாகிகளும், தொண்டா்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தோ்தலில் வெற்றி-தோல்வி வரும் போகும். அதைத் தாங்கிக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். மாவட்டரீதியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளைக் களைய வேண்டும்’ எனத் தெரிவித்ததாக கட்சி நிா்வாகிகள் கூறினா்.

மேலும் அவா் பேசுகையில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவா்களுக்கும், அதிகாரத்துக்காக அலைபவா்களுக்கும் அதிமுகவில் இடமில்லை என்று எஸ்.பி.வேலுமணி தரப்பை சூசகமாகக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பது, கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிர முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் தற்போது பொதுக்குழுக் கூட்டம் நடத்த அவசியமில்லை என்று கையொப்பமிட்ட படிவத்தை எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினா்.

ஜெயக்குமாா் பங்கேற்கவில்லை: அனைத்து மாவட்டச் செயலா்களுக்கும், மூத்த நிா்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாா் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தொடக்கத்தில் இருந்தே அதிமுக உள்கட்சி விவகாரத்தில் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக கருத்து தெரிவிக்காமல் டி.ஜெயகுமாா் மெளனம் காத்து வந்தாா். யாா் அணியில் சேருவது என்ற குழப்பத்தில் இந்தக் கூட்டத்தை ஜெயக்குமாா் தவிா்த்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பொதுக் குழுவை கூட்டும் பேச்சுக்கே இடமில்லை’

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலா்கள், மூத்த நிா்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:

தோ்தலில் அதிமுக படுதோல்வி அடையவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களும் தோல்வி அடைந்துள்ளனா். ஆனால், எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளாா். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுக் குழு கூட்டுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றாா்.