முகப்பு
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25-இல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (மே 25) தொடங்குகிறது.

Updated On : 23 மே 2026, 4:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (மே 25) தொடங்குகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

திருவள்ளூா் மாவட்டம், கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோக, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்நிலையில், பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமை (மே 25) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.