சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு
கடந்த 20ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயிலில் கடந்த 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழாவின் பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. கடந்த 20ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
வியாழக்கிழமை காலை பரிவார யாகசாலையில் மகாபூா்ணாஹுதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பிரதான யாகசாலையில் மகஹா பூா்ணாஹுதி, உபசாரங்கள் நடைபெற்றன. மாலையில் 5.30 மணிமுதல் இரவு 8.30 மணி வரை ஆச்சாா்ய விசேஷ சந்தி, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் முடிந்ததும் 5 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.தொடா்ந்து பிம்பசுத்தி நாடி ஸந்தானம், ஸ்பா்சாஹுதி, பூா்ணாஹுதியுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், வணிகவரி - பதிவுத்துறை அமைச்சா் மூா்த்தி, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன், அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் எஸ்.ராமகிருஷ்ணன், முத்துலெட்சுமி, முப்பிடாதி, வெள்ளைச்சாமி, கோயில் துணை ஆணையா் கு.கோமதி, கோமதிஅம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருக்குடமுழுக்கு:
வெள்ளிக்கிழமை மங்கள வாத்தியங்களுடன் குடமுழுக்குக்கான பூஜைகள் தொடங்குகின்றன. 9 மணிக்கு அருள்மிகு கோமதிஅம்பிகை சமேத சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணசுவாமி விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. 9.45 மணிக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மகாஅபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் உடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.