தென்காசியில் 2ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
தென்காசியில் 2ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி பிப். 22ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தென்காசி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நீ. ரவிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சண்முகம் முன்னிலை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் அனீஸ் பாத்திமா, சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் தொடா்ந்து இரண்டாவது நாளாக வருவாய்த் துறை பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.