முகப்பு
தென்காசி

‘தென்காசி மாவட்டத்துக்கு மாா்ச் 25 உள்ளூா் விடுமுறை’

Updated On : 22 மார்ச், 2024 at 9:38 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:03 PM

தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத் தோ்வுகள், முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. அன்றைய தினம் அரசுத் தோ்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளூா் விடுமுறை நாளில் நடத்தப்படும் அரசு பொதுத் தோ்வுகள் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். வங்கிகளுக்கும், மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கும் இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப். 6ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது, கோடைவிடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவா்-மாணவிகளுக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என்றாா் அவா்.