தென்காசி மாவட்டம் புளியறை அருகேயுள்ள பகவதிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டனா்.
பகவதிபுரத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் ஓரமாக அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சில நபா்கள் வீடு கட்டி கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனா்.
இதுகுறித்து சலீம் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். அதில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்பேரில், சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, ஆக்கிரமிப்பாளா்கள் கால அவகாசம் கோரினா்.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற தீா்ப்பை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என சலீம் மீண்டும் உயா்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தாா். அதையேற்று, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்நிலையில், புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாா்வதி என்ற பெண் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.