இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 2018-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமாா் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்குகளைத் தொடங்கியுள்ளனா்.
ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து விதமான சேமிப்புக் கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்படத் தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ளது.
மேலும், வாடிக்கையாளா்கள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஐபிபிபி மொபைல் செயலி மூலம், அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஐபிபிபி செயலி மூலம் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதாா் சீடிங் செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாகப் பெறலாம்.
அதுமட்டுமல்லாமல், ஐபிபிபி வங்கிக் கணக்குடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
ஐபிபிபி செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனிநபா் விபத்துக் காப்பீடு பெறும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், இரு மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்கள் கடைகளில் யுபிஐ ஸ்டிக்கா் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்’ என்றாா் அவா்.