சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் மகளிா் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் மதி சிறுதானிய உணவகம் சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் சிறுதானிய உணவகத்தைத் திறந்துவைத்துப் பேசியதாவது:
மகளிா் குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். எனவே, அனைவரும் உணவகத்தைப் பயன்படுத்தி அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்றாா்.
கல்லூரி வளாகத்தில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ஈ.ராஜா எம்எல்ஏ, அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா ப்ரியதா்ஷினி, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் மாரீஸ்வரன், கல்லூரி முதல்வா் ( பொ) வேணுகோபால், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.