கூலிவு உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி, சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், லெட்சுமியாபுரம் 4-ஆவது தெருவில் இருந்து சாலை மறியலில் ஈடுபட வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனா்.
பேரணியில் சிஐடியு மாவட்டச் செயலா் மாரியப்பன், மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டியன், பி.அசோக்ராஜ், வட்டாரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, விசைத்தறி சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், சக்திவேல், மாணிக்கம், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான விசைத்தறி தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
திருவள்ளுவா் சாலை வழியாக அவா்கள் திருவேங்கடம் சாலையில் சென்றபோது போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த வழியாக கோவில்பட்டி, திருவேங்கடம் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக 40 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து காவல் துணை கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.